அமெரிக்காவின் மேரிலாந்து மாகாண துணை ஆளுநரான முதல் இந்தியர்
ஐதராபாத்தில் பிறந்த அருணா மில்லர், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற வரலாறு படைத்துள்ளார். மேரிலாந்து மாகாணத்தின் 10வது துணைநிலை ஆளுநராக மில்லர் நேற்று(ஜன:18) பதவியேற்றார். அருணா மில்லர்(58) ஒரு தொழில் போக்குவரத்து பொறியாளர் ஆவார். பதவியேற்பு உரையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய தன் குடும்பத்திற்கு தனது வெற்றியை அர்ப்பணித்து கௌரவபடுத்தினார். மெக்கானிக்கல் இன்ஜினியரான இவரது தந்தை, 1960களின் பிற்பகுதியில் ஒரு மாணவராக அமெரிக்காவிற்கு முதன்முதலில் குடியேறினார். அதன்பிறகு, 1972ல் தன் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றார். அப்போது அருணா மில்லருக்கு 7 வயது. அதன்பின், அப்ஸ்டேட் நியூயார்க்கில் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் அருணா மில்லர் வாழ்ந்துவந்தார்.
அரசியல் வெற்றிகள்
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மேரிலாந்து துணைநிலை ஆளுநர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பபாக போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இதையடுத்து, இவரது பதியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்திய-அமெரிக்கர்கள் மத்தியில் இவருக்கு இருந்த செல்வாக்கே இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என்கின்றது அமெரிக்க செய்திகள். மில்லர் 2010 முதல் 2018 வரை மேரிலாந்து ஹவுஸ் ஆஃப் டெலிகேட்ஸில் இரண்டு முறை பணியாற்றியுள்ளார். பகவத் கீதையின் மீது சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட இவர், ஒரு புலம்பெயர்ந்த மாற்று இன பெண்ணாக தான் பட்ட கஷ்டங்களையும், ஆங்கிலம் தெரியாமல் தான் பள்ளியில் பட்ட சிரமங்களையும் தன் பதவியேற்பு உரையில் உருக்கமாக எடுத்துரைத்தார். மேலும், தனக்கு வாக்களித்த மேரிலாந்து வாக்காளர்களுக்கு மிகப் பெரிய நன்றியையும் தெரிவித்தார்.