அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்
அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, அமெரிக்க விமான போக்குவரத்து அமைப்பில் 'நோட்டம்' என்ற தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டம் என்பது விமான ஓடுதளத்தில் விமானம் இறங்குவது மற்றும் அது தொடர்பான விவரங்களை விமானிக்கும், பிற விமான ஊழியர்களுக்கும் அளிக்கும் தொழில்நுட்பமாகும். இதனால் நேற்று அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, சர்வர் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் அவசரமாக தரையிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. அதன்பேரில், ஏராளமான விமானங்கள் உள்ளூர் மற்றும் அண்டை விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டன. மேலும் 400விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
விமான சேவை பாதிப்பால் பயணிகள் அவதி - கோளாறை சரிசெய்த நிபுணர்கள்
இதனையடுத்து, உள்நாட்டு விமான இயக்கத்தை தாமதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனால் நாடு முழுவதும் நேற்று விமான சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தீவிர முயற்சிக்கு பின்னர், இந்த தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் சரிசெய்துள்ளார்கள். அதன் பின்னரே, விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு கூறுகையில், 'அமெரிக்கா முழுவதும் வழக்கமான விமான போக்குவரத்துக்கள் படிப்படியாக மீண்டும் இயல்புக்கு திரும்புகிறது" என்று தெரிவித்தது. மேலும், விமானங்களை அவசரமாக தரையிறக்கும் அறிவிப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட காரணம் என்ன?, இதில் ஏதேனும் சதி உள்ளதா ? போன்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.