
ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஈரான் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தொடங்கும் என்று ஈரான் தெரிவித்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம்
இதற்கிடையில், இன்று செய்தி நிறுவனத்திடம் பேசிய இரண்டு அமெரிக்க அதிகாரிகள் விரைவில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று தெரித்துள்ளனர்.
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆனால், ஏப்ரல் 1 தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பென்டகன் இந்த தாக்குதலை இஸ்ரேல் செய்ததாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.