இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி
கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதன் பின், போர் நிலையை அறிவித்த இஸ்ரேல், ஹமாஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 5வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சனிக்கிழமை நடந்த பாலஸ்தீன தாக்குதலின் பின்னணியில் இரகசிய மூளையாக செயல்பட்ட பாலஸ்தீனிய போராளி முகமது டெய்ஃப் குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம். இஸ்ரேலால் தேடப்படும் 'மோஸ்ட் வாண்டட்' பயங்கரவாதியான முகமது-டெய்ஃப் இஸ்ரேல் மீதான தாக்குதலை அல் அக்சா வெள்ளம் என்று அழைத்துள்ளார். ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் நடத்திய வன்முறை சோதனைக்கு கொடுக்கும் பதிலடி இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"இந்தப் போருக்கு நாங்கள் இரண்டு ஆண்டுகளாக தயாராகினோம்": ஹமாஸ்
மே 2021இல், இஸ்லாத்தின் மூன்றாவது புனித தலமாக கருதப்படும் ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் சோதனை நடத்தியது, உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் சமூகத்தை கோபப்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு தான், முகமது டெய்ஃப் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிடத் தொடங்கினார். "ரம்சான் பண்டிகையின் போது அல் அக்ஸா மசூதிக்குள் இஸ்ரேல் புகுந்து, வழிபாட்டாளர்களை அடித்து, தாக்கியது. முதியவர்கள் மற்றும் இளைஞர்களை மசூதிக்கு வெளியே இழுத்துச் சென்றது போன்ற காட்சிகளை பார்த்து கோபமடைந்த முகமது டெய்ஃப் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட தொடங்கினார்" என்று செய்திகள் வெளியாகியுள்ளன. "இந்தப் போருக்கு நாங்கள் இரண்டு ஆண்டுகளாக தயாராகினோம்" என்று ஹமாஸின் வெளியுலக உறவுகளின் தலைவர் அலி பராக்கா கூறியுள்ளார்.