அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர்
அமெரிக்கா: சனிக்கிழமையன்று புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை ஒரு வெள்ளையர் சுட்டு கொன்றார். இனவெறுப்பினால் அந்த வெள்ளையர் கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். "இந்த துப்பாக்கிச் சூடு இன ரீதியான வெறுப்பினால் தூண்டப்பட்டது. குற்றம்சாட்டப்பவருக்கு கறுப்பின மக்கள் மீது வெறுப்பு இருந்திருக்கிறது" என்று ஜாக்சன்வில் ஷெரீப் டி.கே. வாட்டர்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆனால், குற்றம்சாட்டப்பவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கறுப்பினத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை சுட்டு கொன்ற அவர், பின்பு தன்னை தானே சுட்டு கொண்டார்.
கறுப்பின கல்லூரி அருகே இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனியாகச் செயல்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு அவர், ஊடகங்கள், அமலாக்கப் பிரிவினர் ஆகியோருக்கு கறுப்பின மக்கள் மீதான வெறுப்பை விவரிக்கும் "பல அறிக்கைகளை" எழுதி இருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. AR-15 போன்ற துப்பாக்கியை குற்றம்சாட்டப்பட்டவர் பயன்படுத்தியதாகவும், அதில் ஸ்வஸ்திகாக்கள்(ஹிட்லர்-நாட்சிகளுடன் தொடர்புடைய ஒரு குறியீடு) பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எட்வர்ட் வாட்டர்ஸ் பல்கலைக்கழகம் என்ற கறுப்பின கல்லூரி அருகே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் அமெரிக்காவில், கருப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் குறையவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.