100 ஆண்டுகாலக் கணிதப் புதிர்களுக்குத் தீர்வு! ஃபீல்ட்ஸ் மெடல் வென்று வரலாற்று சாதனை படைத்த இரு சீன கணிதவியலாளர்கள்
செய்தி முன்னோட்டம்
கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் உயரிய ஃபீல்ட்ஸ் மெடல் விருதை முதன்முறையாக இரு சீன கணிதவியலாளர்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். 40 வயதிற்கு உட்பட்ட சிறந்த கணிதவியலாளர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருது, அமெரிக்காவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கப்பட்டது. சீனாவை சேர்ந்த ஹாங் வாங், யூ டெங் ஆகியோருடன் அமெரிக்காவின் ஜான் பார்டன் மற்றும் கனடாவின் ஜேக்கப் சிம்மர்மேன் ஆகியோரும் இவ்விருதைப் பகிர்ந்து கொண்டனர்.
100 ஆண்டு புதிர்
100 ஆண்டுகால கணிதப் புதிர்களுக்குத் தீர்வு
35 வயதான பெண் கணிதவியலாளர் ஹாங் வாங், 1917ல் ஜப்பானிய கணிதவியலாளர் சோய்ச்சி ககேயா எழுப்பிய ககேயா கணிதப் புதிருக்கு தனது சக ஆய்வாளருடன் இணைந்து முப்பரிமாண அடிப்படையில் தீர்வு கண்டுள்ளார்.
அதேபோல 37 வயதான யூ டெங், ஜெர்மன் கணிதவியலாளர் டேவிட் ஹில்பெர்ட் 1900ல் உருவாக்கிய ஹில்பெர்ட்டின் 6வது புதிருக்கு வாயுக்களின் மூலக்கூறு இயக்கத்தைக் கொண்டு துல்லியமான தீர்வைக் கண்டறிந்துள்ளார்.
இந்த சாதனைகள் கணித உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றன.
மூன்றாவது பெண்
விருதைப் பெற்ற மூன்றாவது பெண்மணி ஹாங் வாங்
ஃபீல்ட்ஸ் மெடல் வரலாற்றிலேயே இந்த விருதைப் பெறும் மூன்றாவது பெண் என்ற பெருமையை ஹாங் வாங் பெற்றுள்ளார்.
சீனாவில் பிறந்த இவர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்று தற்பொழுது பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது இந்த வரலாற்று சாதனையைப் பாராட்டி பிரான்ஸ் அதிபர் எமானுவல் மேக்ரான் அவருக்கு நேரடியாகத் தொலைபேசியில் அழைத்துத் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும் இவர்களது சாதனைக்கு மிகப்பெரியளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.