காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர்
கடந்த மாதம் இறந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, 100 மில்லியன் யூரோக்களை, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 9,05,86,54,868, தனது 33 வயது காதலியான மார்டா ஃபசினாவிற்காக விட்டு செல்வதாக, தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை ஆங்கில நாளிதழான 'தி கார்டியன்' வெளியிட்டுள்ளது. மூன்று முறை இத்தாலிய பிரதம மந்திரியாக பதவி வகித்த, சில்வியோவின் மொத்த சொத்து மதிப்பு, 6 பில்லியன் யூரோக்களுக்கு மேல் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலிய பிரதமரின் காதலி, ஃபசினா, மார்ச் 2020 இல் இருந்து, பெர்லுஸ்கோனியுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.
கட்சியின் துணை தலைவராக இருக்கும் ஃபசினா
பெர்லுஸ்கோனியும், ஃபசினாவை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், அவர் மரணப் படுக்கையில் இருக்கும்போது, அவரைத் தனது மனைவி என்று குறிப்பிட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஃபசினாவும் ஒரு அரசியல்வாதிதான். 33 வயதான அவர், 2018 பொதுத் தேர்தலிலிருந்து இத்தாலியின் நாடாளுமன்றத்தின் Lower Chamber உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தற்போது, 1994 இல் திரு பெர்லுஸ்கோனியால் நிறுவப்பட்ட 'ஃபோர்ஸா இத்தாலியா'வின் துணை தலைவராகவும் இருக்கிறார். ஊடக அதிபர், தொழிலதிபர் மற்றும் பிரதம மந்திரி என பல தசாப்தங்களாக இத்தாலிய பொது வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய திரு. பெர்லுஸ்கோனி, கடந்த ஜூன் 12 அன்று தனது 86வது வயதில் காலமானார்.