டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது
விஞ்ஞானிகள் டூம்ஸ்டே கடிகாரத்தை நேற்று(ஜன 24) அப்டேட் செய்துள்ளனர். டூம்ஸ்டே கடிகாரம் என்பது மனிதகுலத்தின் அழிவை கணக்கிடும் ஒரு கடிகாரமாகும். உலகில் நடக்கும் போர்கள், அணு ஆயுத பயன்பாடுகள் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அழிவுகளை வைத்து இந்த நேரத்தை முன்னணி விஞ்ஞானிகள் கணிகிடுகின்றனர். நம் செயல்களை "மீட்டமைப்பதற்கான ஒரு அழைப்பாக" இந்த அப்டேட் பார்க்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த டூம்ஸ்டே கடிகாரம் 1945இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் முதல் அணு ஆயுதங்களைத் தயாரித்த மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றிய பிற விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டது. இது அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடிகாரத்தில் எவ்வளவு நேரம் குறைக்கப்படுகிறதோ மனித வாழ்வின் முடிவு அவ்வளவு நெருக்கத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடிகாரத்தின் நொடிகளை மாற்ற வைத்த உக்ரைன் போர்
கடந்த 2021ஆம் ஆண்டில் இது புதுப்பிக்கப்பட்ட போது, மனித அழிவுக்கு இன்னும் 100 நொடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. வரலாற்றிலேயே ஊழி காலம் இவ்வளவு குறைவாக கணக்கிடப்பட்டது இதுவே முதல்முறை. அந்த வரலாற்று ரெகார்டை இந்த வருட அப்டேட் முறியடித்துள்ளது. இந்த முறை கடிகாரம் நேற்று அப்டேட் செய்யப்பட்ட போது, ஊழி காலத்திற்கு இன்னும் 90 நிமிடங்களே இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த முறையை விட இந்த முறை, ஊழி காலம் 10 நொடிகள் குறைக்கப்பட்டுள்ளது. இது இவ்வளவு குறைக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக ரஷ்ய-உக்ரைன் போரை விஞ்ஞானிகள் சுட்டி காட்டுகின்றனர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா, அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற பயம் நிலவி வருவதால் கடிகாரத்தின் நொடிகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.