இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது?
இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சில சீன போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதன்முதலாக, ஜூலை 27ஆம் தேதி அன்று மக்கள் விடுதலை இராணுவத்தின்(சீன கடற்படை) பணிக்குழு-106 இந்தோனேசியா அருகில் உள்ள சுரபயா பகுதிக்குள் நுழைந்தது. இது இந்தியப் பெருங்கடல் பகுதியை(IOR) சேர்ந்த ஒரு இடமாகும். அந்த சீன கடற்படை பணிக்குழுவிடம் பெரிய போர்க்கப்பல்களும் உள்ளன. இதில் ஹோஹோட், ஜிங்காங் ஷான் போன்ற கப்பல்களும் அடங்கும். ஹோஹோட் என்பது ஒரு நாசகார போர்க்கப்பலாகும். இது சுமார் 7,500-டன்கள் எடை கொண்டது. ஜிங்காங் ஷான் கப்பல் ஹோஹோட் கப்பலை விட பெரியது. அது சுமார் 25,000-டன்கள் எடை கொண்டது. நீர்வாழ் போக்குவரத்து கப்பலான ஜிங்காங் ஷான், 800 வீரர்களை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே நிற்கும் யுவான் வாங் 6 உளவு கப்பல்
ஆப்பிரிக்காவின் கொம்பு கடற்கொள்ளையை எதிர்க்கும் பணிக்காக இந்த போர்க்கப்பல்கள் அனுப்பட்டுள்ளதாக சீனா கூறி வருகிறது. ஆனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சீனா தனது போர்கப்பல்களின் திறனை சோதித்து வருவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், இந்தியப் பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே யுவான் வாங் 6 என்ற செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கடற்பகுதியில் காணப்பட்ட இந்த கப்பல், தற்போது, சமீபத்தில் ஏவப்பட்ட சீன செயற்கைக்கோளை கண்காணிக்க இந்திய பெருங்கடல் பகுதிக்குள் வந்துள்ளது. இப்படிப்பட்ட கப்பல்கள் உளவு கப்பல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலின் ஆழம், உப்புத்தன்மை போன்ற விவரங்களை சேகரித்து, பிற்காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்தும் நோக்கத்தோடு இவை இந்திய பெருங்கடலுக்குள் வருகின்றன.