சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா
இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை குறிவைத்து சீனா "வேவு" பலூன்களை அனுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் சுற்றி திரிந்த சீனாவின் பலூனை அமெரிக்க விமானப்படை சில நாட்களுக்கு முன் சுட்டு தள்ளியது. அதையடுத்து, தற்போது இந்த செய்தி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென் கரோலினா கடற்கரையில் சனிக்கிழமையன்று(பிப் 4) போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன "வேவு" பலூனின் உடைந்த பாகங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நட்பு நாடுகளுக்கு விளக்கியுள்ளனர். திங்களன்று(பிப் 6) அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் வெண்டி ஷெர்மன், வாஷிங்டனில் வைத்து சுமார் 40 தூதரகங்களின் அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கினார்.
ஐந்து கண்டங்களில் காணப்பட்ட கண்காணிப்பு பலூன்கள்
"சீனாவின் தெற்கு கடற்கரையில் ஹைனான் மாகாணத்திற்கு வெளியே பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கண்காணிப்பு பலூன்கள், ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் இராணுவ சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது." என்று தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் நேற்று(பிப் 7) ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி, பல பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது என்று தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அந்த அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. PLA(மக்கள் விடுதலை இராணுவம்) விமானப்படையின் ஒரு பகுதியாக இயக்கப்படும் இந்த கண்காணிப்பு ஏர்ஷிப்கள் ஐந்து கண்டங்களில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.