60 மணி நேரத் தீவிர வான்வழி நகர்வு! பாகிஸ்தான் தளங்களில் இறங்கிய சீனா, துருக்கி ராணுவ விமானங்கள்; இந்தியா அலெர்ட்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் முக்கிய ராணுவ விமான தளங்களில் சீனா மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்த கனரகப் போக்குவரத்து விமானங்கள் தொடர்ச்சியாக தரையிறங்கி வருவது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்திலும், கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமான தளத்திலும் சுமார் 60 மணி நேரத்திற்குள் பல ராணுவ விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கியுள்ளன. இந்தத் தீவிர வான்வழி நகர்வுகள் தளவாட விநியோகத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுவதால் இந்தியப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
ட்ரோன்கள்
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தளவாடங்கள் விநியோகம்?
பாகிஸ்தானுக்கு அதிநவீன ட்ரோன்கள், வான் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதற்காகவே இந்த பிரம்மாண்ட வான்வழி விநியோகம் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவிடமிருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தொடர்ந்து பெற்று வரும் பாகிஸ்தான், சமீபகாலமாகத் துருக்கியிடமிருந்து ட்ரோன் தொழில்நுட்பங்களையும் வாங்கி வருகிறது.
இந்த 60 மணி நேரப் போக்குவரத்து சாதாரணப் பயிற்சியாக இல்லாமல், குறுகிய காலத்தில் பெருமளவிலான ராணுவத் தளவாடங்களை பாகிஸ்தானுக்குள் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
முக்கோணக் கூட்டணி
சீனா - துருக்கி - பாகிஸ்தான் முக்கோணக் கூட்டணி வலுப்பெறுகிறது
கடந்த ஆண்டு இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சீனா மற்றும் துருக்கி அளித்து வரும் ராணுவ ஆதரவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
துருக்கியின் கான் 5 ஆம் தலைமுறைப் போர் விமானத் திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பொறியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மேலும், ஆகஸ்ட் 7 அன்று பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா இணைந்து மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ராணுவ கட்டமைப்பு
ஆபரேஷன் சிந்தூர் மோதலுக்குப் பிந்தைய ராணுவ மறுகட்டமைப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானின் 13 முக்கிய விமானத் தளங்கள் மற்றும் ட்ரோன் மையங்களை இந்திய படைகள் தாக்கி அழித்தன.
இதில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யவும், தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகளை மீண்டும் பலப்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.
இதற்காக சீனா மற்றும் துருக்கியிடம் இருந்து புதிய ரக ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அவசரகதியில் பாகிஸ்தான் கொள்முதல் செய்து வருவதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தீவிர கண்காணிப்பு
எல்லைப் பகுதியில் இந்தியாவின் தீவிர கண்காணிப்பு
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் முப்படை தளவாடப் பரிமாற்றங்கள் தீவிரமடைந்துள்ளதால், இந்திய ராணுவமும் வான்படையும் முழு உஷார் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவின் எஸ்-400 மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் எல்லையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான், சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் கூட்டு ராணுவ நகர்வுகளை இந்திய உளவுத்துறை மிக நுணுக்கமாகக் கண்காணித்து, எந்தவொரு அவசரகாலச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.