புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்
இந்த மாத புத்தாண்டு விடுமுறையின் போது சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 36,000 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று புதிதாக வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது. சந்திர புத்தாண்டு விடுமுறை நாட்களில் சீனா ஒரு நாளைக்கு 36,000 கொரோனா இறப்புகளைக் எதிர்கொள்ளலாம் என்று இங்கிலாந்தை சேர்ந்த ஏர்ஃபினிட்டி பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 29ஆம் தேதி இந்த நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டில் 25000 இறப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதே மதிப்பாய்வு தற்போது புதுப்பிக்கப்பட்டு 11,000 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீனா தனது ஜீரோ கோவிட் கொள்கையை தளர்த்தியத்தில் இருந்தே கொரோனா பரவல் அங்கு தீவிரமடைந்திருக்கிறது. மேலும், பயணம் செய்வதற்கு இருந்த கட்டுப்பாடுகளும் புத்தாண்டு விடுமுறைக்காக தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
சீன சுகாதார அமைப்பிற்கு எச்சரிக்கை
இந்த புதுப்பிக்கப்பட்ட மதிப்பாய்வு சீன பிராந்திய மாகாணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சுகாதாரத் தகவலின் அடிப்படையிலும் கட்டுப்பாடுகளை தளர்த்திய பிற ஜீரோ கோவிட் நாடுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டுள்ளது. பாரம்பரிய விடுமுறையின் போது மில்லியன் கணக்கான மக்கள் பயணம் செய்வதால், கொரோனா பரவல் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் என்று கூறுவதை விட சீனா "ஒரு நீண்ட, கடுமையான கோவிட் அலைக்கு" தள்ளப்படும் என்று அந்த மதிப்பாய்வில் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சிரமப்பட்டு வரும் சீன நாட்டின் சுகாதார அமைப்பை ஏர்ஃபினிட்டியின் அறிக்கை எச்சரித்திருகிறது. "நெரிசலான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கவனிப்பு பற்றாக்குறையால் சிகிச்சையளிக்கக்கூடிய பல நோயாளிகள் இறக்கக்கூடும்." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.