இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை திடீரென்று நிறுத்தியது கனடா
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்குள் இந்திய-கனடா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மூன்று மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவும் இந்தியாவும் 2010ஆம் ஆண்டு முதல் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் பற்றி விவாதித்து வருகின்றன. கடந்த ஆண்டு முறைப்படி இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், "வர்த்தக பேச்சுவார்த்தைகள் நீண்ட, சிக்கலான செயல்முறைகள் ஆகும். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர, அந்த பேச்சுவார்த்தையை தற்போதைக்கு இடைநிறுத்தியுள்ளோம்" என்று கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
G20 உச்சிமாநாட்டிற்கு திடீரென்று இடைநிறுத்தப்பட்ட ஒப்பந்தம்
இந்த தகவலை தெரிவித்த கனடா அதிகாரி, இது குறித்த விரிவாக விவாதிக்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. இது குறித்து பேசிய கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா, இந்திய-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தையை இடைநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதற்கான காரணம் விளக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா-கனடா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்கவும் முதலீட்டை விரிவுபடுத்தவும் இந்த ஆண்டுக்குள் ஒரு முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் G20 உச்சிமாநாட்டின் போது, இந்த ஒப்பந்தம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தற்போது திடீரென்று இடை நிறுத்தப்பட்டுள்ளது.