கனடாவில் சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்
கனடாவில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை மீது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடியும், பாலஸ்தீன பாரம்பரிய ஆடையான கெஃபியாவை போர்த்தியும் சேதப்படுத்த்தியுள்ள வீடியோ வெளியாகி இந்தியர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பிராம்ப்டனில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை ஹிந்து அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் இந்த வெறுக்கத்தக்க குற்றத்தால் கோபமடைந்ததாக தெரிவித்துள்ளது. தனது பதிவில் மேலும், "ஆப்கானிய படையெடுப்பாளர்களை தோற்கடித்ததன் மூலம் தேசத்தின் பாதுகாவலராக இந்தியாவில் மற்றும் உலகளவில் மதிக்கப்படும் சீக்கியப் பேரரசர் மகாராஜா ரஞ்சித் சிங்." என்று தெரிவித்துள்ளது.
மகாராஜா ரஞ்சித் சிங் யார்?
மகாராஜா ரஞ்சித் சிங் சீக்கியப் பேரரசின் நிறுவனர் என்று அறியப்படுகிறார் மற்றும் அதன் முதல் மகாராஜா ஆவார். அவர் 1801 முதல் 1839 இல் இறக்கும் வரை பேரரசை கட்டி ஆண்டார். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அவர் இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்கு பகுதி முழுவதையும் ஆட்சி செய்தார். பஞ்சாப் சிங்கம் என்றும் அழைக்கப்படும் ரஞ்சித், தனது இளமை பருவத்தில் தனது தந்தை இறந்தபோது ஆப்கானியர்களை வெளியேற்ற பல போர்களை நடத்தினார். 21 வயதில், பஞ்சாப் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார். பாகிஸ்தானிலும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.