சாமானிய பெண்ணை திருமணம் செய்யவுள்ள புருனே இளவரசர் அப்துல் மாதின்
"ஹாட் ராயல்" என்று அழைக்கப்படும் புருனேயின் இளவரசர் அப்துல் மதீன் இப்னி ஹசனல் போல்கியா, தனது வருங்கால மனைவி அனிஷா ரோஸ்னாவை ஞாயிற்று கிழமை திருமணம் செய்யவுள்ளார். இந்த திருமண வைபவம் 10 நாள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதான இளவரசனும், 29 வயதான அனிஷாவும் வியாழன் அன்று பந்தர் செரி பெகவானில் உள்ள தங்கக் குவிமாட மசூதியில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய உள்ளனர். உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரும், ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய செல்வந்தருமான சுல்தான் ஹசனல் போல்கியாவின் 10வது குழந்தை மற்றும் நான்காவது மகன் தான் மதின்.
போலோ விளையாட்டு வீரர், இளவரசர் அப்துல் மதீன்
இந்த விழாவில் கலந்துகொள்ள வெளிநாட்டில் இருந்தும் நாட்டிற்கு திரும்பியுள்ளனர் புருனியர்கள். ஞாயிற்றுக்கிழமை, மணமக்கள் ஊர்வலமாக அரச வண்டியில் செல்வார்கள். அப்போது தெருக்களில் நின்று அவர்களை வாழ்த்தவே இந்த ஏற்பாடாம். புருனே இளவரசர் மதின் பெரும்பாலும் இங்கிலாந்து இளவரசர் ஹாரியுடன் ஒப்பிடப்படுகிறார். காரணம், இவரும் புருனேயின் விமானப்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக இருக்கிறார். அவர் பிரிட்டனின் ராயல் மிலிட்டரி அகாடமி சாண்ட்ஹர்ஸ்டில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புருனேவை பிரதிநிதித்துவப்படுத்தி, போலோ விளையாட்டில் விளையாடினார். மணமகள் அனிஷா, சுல்தான் போல்கியாவின் சிறப்பு ஆலோசகரான பெஹின் டத்தோ இசாவின் பேத்தி ஆவர். அவர் தனது ஃபேஷன் பிராண்ட் மற்றும் சுற்றுலா வணிகத்தின் இணை உரிமையாளராக அறியப்படுகிறார்.