'சமத்துவ சிலை': அம்பேத்கரின் மிக உயரமான சிலையை நிறுவ இருக்கிறது அமெரிக்கா
இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படும் பி.ஆர்.அம்பேத்கரின் மிக உயரமான சிலை வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அமெரிக்காவில் திரைப்பட உள்ளது. 19 அடி உயரம் உள்ள இந்த அம்பேத்கரின் சிலைக்கு 'சமத்துவ சிலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. வாஷிங்டனுக்கு தெற்கே சுமார் 35 கிமீ தொலைவில் இருக்கும் மேரிலாந்தின் அக்கோகீக் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்திற்குள்(AIC) இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது. "இந்தியாவிற்கு வெளியே இருக்கும் அம்பேத்கர் சிலைகளிலேயே இதுதான் மிகப்பெரியது. மேலும் இந்த மையத்தில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் நினைவகத்தின் ஒரு பகுதியாக இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது" என்று AIC தெரிவித்துள்ளது.
அக்டோபர் 14ஆம் தேதியின் சிறப்பு
ஏப்ரல் 14, 1891 இல் பிறந்த டாக்டர் பீமா ராவ் அம்பேத்கர், இந்திய அரசியலமைப்புச் சபையின் மிக முக்கியமான வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார். அதனால் அவருக்கு இந்திய அரசியலமைப்பின் தந்தை என்ற பெயர் கிடைத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக அவர் பணியாற்றினார். தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய சமூக இயக்கங்களில் அம்பேத்கர் முக்கியப் பங்காற்றினார். அதன் பிறகு, டிசம்பர் 6, 1956அன்று அம்பேத்கர் உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு அதே ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அவர் புத்த மதத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே அக்டோபர் 14ஆம் தேதியில் தான் மேரிலாந்தில் அம்பேத்கரின் சிலை திறக்கப்பட இருக்கிறது.