பாகிஸ்தான் வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி
பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களால் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர். பிஷின் மாவட்டத்தின் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இது அந்நாட்டில் இன்று நடந்த முதல் குண்டுவெடிப்பாகும். அதில், 17 பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர். அது நடந்து ஒரு மணி நேரத்திற்குள், கில்லா அப்துல்லா பகுதியில் உள்ள ஜமியத்-உலேமா இஸ்லாம்-பாகிஸ்தானின் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. அதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே வெடித்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டது. அது கட்டிடத்திற்கு வெளியே ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக குவெட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். "வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க, பயங்கரவாதிகள் தேர்தல் வேட்பாளர்களை குறிவைக்கின்றனர். ஆனால் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது." என்று பலுசிஸ்தான் பஞ்ச்கூரில் மூத்த போலீஸ் அதிகாரி அப்துல்லா செஹ்ரி கூறியுள்ளார். இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததையும் உறுதி செய்துள்ள, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்(ECP) வியாழனன்று நடைபெறவுள்ள தேர்தலுக்காக பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.