LOADING...
பாங்காக் பாரில் பயங்கர தீ விபத்து: மின் கசிவால் 27 பேர் பரிதாப பலி
பாங்காக் பாரில் பயங்கர தீ விபத்து

பாங்காக் பாரில் பயங்கர தீ விபத்து: மின் கசிவால் 27 பேர் பரிதாப பலி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 13, 2026
07:39 am

செய்தி முன்னோட்டம்

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபல இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார். பாங்காக்கில் அமைந்துள்ள 'ராங் பீர் நா லாட் பிராவ்' என்ற பிரபல கேளிக்கை விடுதியில், நள்ளிரவு 11:30 மணி அளவில் வாடிக்கையாளர்கள் பலர் திரண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. மெயின் சுவிட்ச் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து, அது கண் இமைக்கும் நேரத்தில் கட்டிடம் முழுவதும் பரவியதாக அங்கு இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விவரம்

கழிவறையில் தஞ்சம் புகுந்தவர்களின் சோகம்

தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு முன்பக்க வாசல் வழியாக வெளியேற முயன்றனர். ஆனால், கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வாசலை சூழ்ந்ததால், தப்பிக்க வழி தெரியாத பல பயணிகள் புகையிலிருந்து தங்களை காத்துகொள்ளக் கட்டிடத்தின் பின்பகுதியில் இருந்த கழிவறைகளுக்குள் சென்று மறைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி, பெரும்பாலான உடல்கள் அங்கிருந்தே மீட்கப்பட்டதாக பிரதமர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயின் வீரியத்தால் கட்டிடத்தின் உள் பகுதி முற்றிலும் கருகியதோடு, கூரையின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது. இக்கோர விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement