LOADING...
கல்வி நிலையங்களில் அரசியலுக்குத் தடை; Gen Z போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடித்த நேபாள பிரதமர் அதிரடி உத்தரவு
நேபாளத்தில் கல்வி நிலையங்களில் அரசியல் சார்ந்த அமைப்புகளுக்கு தடை விதித்தார் பிரதமர் பலேன் ஷா

கல்வி நிலையங்களில் அரசியலுக்குத் தடை; Gen Z போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடித்த நேபாள பிரதமர் அதிரடி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 30, 2026
06:58 pm

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள 35 வயது இளைஞர் பலேன் ஷா, தனது முதல் 48 மணிநேரத்திலேயே 100 அம்ச அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ளார். இதில் மிக முக்கியமாக, அனைத்துக் கல்வி நிலையங்களிலும் அரசியல் சார்ந்த மாணவர் அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளார். மாணவர் அமைப்புகள் வன்முறை மற்றும் மிரட்டல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், கல்வியைச் சீரமைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதற்குப் பதிலாக 90 நாட்களுக்குள் அரசியல் சார்பற்ற 'மாணவர் கவுன்சில்கள்' உருவாக்கப்படும் என்றும், இனி கல்வி நிலையங்களில் அரசியல் கொடிகளுக்கு இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கைது

முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடி கைது

பலேன் ஷா தலைமையிலான புதிய அரசு, தனது அரசியல் எதிரிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜென் ஜி (Gen Z) போராட்டங்களை ஒடுக்கியதாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி சனிக்கிழமை அன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 77 பேர் கொல்லப்பட்ட அந்தப் போராட்டத்தை வன்முறை மூலம் ஒடுக்கியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மாற்றங்கள்

கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள்

கல்வித் துறையில் நிலவும் பாரபட்சங்களைக் களைய பலேன் ஷா பல புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். குறிப்பாக, இளங்கலை சேர்க்கைக்குக் குடியுரிமைச் சான்றிதழ் கட்டாயம் என்ற விதியை அவர் நீக்கியுள்ளார். மேலும், ஆக்ஸ்போர்டு, பென்டகன், செயின்ட் சேவியர்ஸ் போன்ற வெளிநாட்டுப் பெயர்களைக் கொண்ட கல்வி நிறுவனங்கள், இந்த ஆண்டு முதல் நேபாளத்தின் மண்ணைச் சார்ந்த அசல் பெயர்களை சூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இது தவிர, ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறும் உள்முறைத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, மாற்று மதிப்பீட்டு முறைகளைக் கொண்டு வரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Advertisement

வேலைவாய்ப்பு

போராட்டத் தியாகிகளுக்கு வேலைவாய்ப்பு உறுதி

தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஜென் ஜி போராட்டத்தின் போது உயிரிழந்த 27 மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க பலேன் ஷா உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே எடுக்கப்பட்ட இந்த முடிவு, தற்போது நேபாள மின்சார ஆணையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதிக்கேற்ப அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணியிடங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த பலேன் ஷா, அவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தனது செல்வாக்கை மேலும் அதிகரித்துள்ளார்.

Advertisement