துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது
கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேரை கொன்ற துருக்கி-சிரியா நிலநடுக்க இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தை தற்போது தத்தெடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், தொப்புள் கொடியுடன் தன் தாயோடு இணைக்கப்பட்ட படி ஒரு குழந்தை நிலநடுக்க இடிபாடுகளுக்கு அடியே கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழந்தை தற்போது தத்தெடுக்கப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுக்கத்தின் போது இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் சிறுமியின் தாய் அஃப்ரா-அபு-ஹதியா சிக்கிக் கொண்டார். அவர் இடிபாடுகளுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டபோது அவருடைய தொப்புள் கொடி புதிதாகப் பிறந்த குழந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், மீட்கப்படுவதற்கு முன் அவர் இறந்துவிட்டார். குழந்தை மட்டும் காயங்களோடு உயிர் தப்பியது. குழந்தையின் பெற்றோரும் 4 உடன்பிறப்புகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததுவிட்டனர். இந்த குழந்தையின் கதை பரவலாக இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.
குழந்தையின் மறைந்த தந்தையின் மாமா அயாவை தத்தெடுக்க இருக்கிறார்
குழந்தையின் குடும்பத்தில் அனைவரும் இறந்துவிட்டதால், குழந்தையை இனி யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற கவலை இணையவாசிகளிடேயே கவலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அந்த குழந்தை தத்தெடுக்கப்ட்டு, 'அயா' என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. 'அயா' என்ற பெயருக்கு அரபு மொழியில் 'அதிசயம்' என்று அர்த்தமாகும். குழந்தையின் செய்தி வெளியானதில் இருந்து, சமூக ஊடகங்களில் பல்லாயிரம் பேர் பிறந்த குழந்தையை தத்தெடுக்க முன்வந்தனர். ஆனால், குழந்தையின் மறைந்த தந்தையின் மாமா, சலா-அல்-பத்ரான், குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் குழந்தையைத் தத்தெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அயாவுக்கு முதுகில் ஒரு பெரும் காயம் பட்டிருந்தது. மேலும், வெப்பநிலை அங்கு குறைவாக இருப்பதால் அயா ஹைப்போதெர்மியாவால் பாதிக்கப்பட்டுள்ளாள். அதை தவிர குழந்தையின் உடல், நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.