அமெரிக்காவில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்: 2 வாரங்களில் 6 கோவில்கள் தாக்கப்பட்டதாக தகவல்
அமெரிக்கா: கடந்த இரண்டு வாரங்களில் கலிபோர்னியாவில் உள்ள பல இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கலிபோர்னியாவின் 17வது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமெரிக்க சபை தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ரித்தேஷ் டாண்டன் இந்த தகவலை கூறியுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள கோவில்கள் தாக்கப்பட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று செனட்டர் ஆயிஷா வஹாப் மீது ரித்தேஷ் டாண்டன் குற்றம்சாட்டியுள்ளார். "இதற்காக இன்று, நாங்கள் செனட்டர் வஹாப் அலுவலகம் முன் ஒரு கண்டனப் பேரணியை நடத்தினோம்" என்று ரித்தேஷ் டாண்டன் ட்விட்டரில்(X தளம்) பதிவிட்டுள்ளார்.
தொடரும் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள்
"அவர் அல்லது அவரது ஊழியர்கள் எங்களை சந்திக்க வேண்டும் என்று கோரி அந்த பேரணியை நடத்தினோம். அனால், துரதிர்ஷ்டவசமாக, வேலை நாளில் அலுவலக நேரத்தின் போது கூட, அவரது அலுவலகம் மூடப்பட்டிருந்தது." என்று அவர் கூறியுள்ளார். "கடந்த இரண்டு வாரங்களில், ஆறு இந்திய கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து வஹாப் மாவட்டத்தில் உள்ளன. ஆனால், செனட்டர் ஆயிஷா வஹாப் இதற்கு எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை." என்று ரித்தேஷ் டாண்டன் தெரிவித்துள்ளார். கடந்த மாதமும், கலிபோர்னியாவின் ஹேவார்டில் உள்ள ஒரு இந்து கோவில் இந்திய எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் ஆதரவு கிராஃபிட்டியால் சிதைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.