அமெரிக்க ஸ்பெல்லிங் பீ பட்டத்தை வென்ற இந்திய-அமெரிக்க சிறுவன்
அமெரிக்காவில் நடைபெற்ற 2023 ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுவன் தேவ் ஷா வெற்றி பெற்றுள்ளார். 14 வயது சிறுவனான தேவ் ஷா, மணல் நிறைந்த பகுதிகளில் வளரும் தாவரம்/விலங்கு என்று பொருள்படும் "psammophile" என்ற 11 எழுத்து வார்த்தையை சரியாக கூறியதை அடுத்து வெற்றி பெற்றார். அவருக்கு $50,000(சுமார் ரூ. 42 லட்சம்) ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 15வது சுற்றுக்குள் நுழைந்த தேவ் ஷாவிடம் "psammophile" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை சரியாக சொல்லுமாறு கேட்டு கொள்ளப்பட்டது. அதை மிக சரியாக கூறிய தேவ் ஷா, அமெரிக்காவின் ஸ்பெல்லிங் பீ பட்டத்தை வென்றார்.
தேவ் ஷா மூன்றாவது முறையாக இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்
வெற்றிக் கோப்பையை வென்ற தேவ் ஷா, "இது உண்மை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் கால்கள் இன்னும் நடுங்குகின்றன." என்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த புகழ்பெற்ற போட்டியில் தேவ் ஷா மூன்றாவது முறையாக கலந்து கொள்கிறார். இதற்கு முன்பு 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அவர் இந்த போட்டியில் போட்டியிட்டிருக்கிறார். புளோரிடாவைச் சேர்ந்த தேவ் ஷா, மோர்கன் ஃபிட்ஸ்ஜெரால்டு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சாஃப்ட்வேர் இன்ஜினியரான ஷாவின் தந்தை தேவல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக 29 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.