சிங்கப்பூரில் 13 மாத குழந்தை கொரோனாவால் மரணம்
சிங்கப்பூரில் கடந்த 13 மாத குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் அக்டோபர் 12 அன்று இறந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 12 வயதிற்குட்பட்டவர்களில் 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நிகழும் முதல் மரணம் இதுவாகும். பாதிக்கப்பட்ட குழந்தை வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகளைப் பெறவில்லை எனக் கூறப்பட்டது. சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையான கொரோனா வைரஸ் ஆபத்து இளம் குழந்தைகளில் குறைவாக இருந்தாலும், வேறு உடல்நல பிரச்சினை உள்ளவர்களுக்கு இது இன்னும் பாதிக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனவே, ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களின் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.
குழந்தை இறந்தது எப்படி?
இறந்த குழந்தை தடுப்பூசி போடப்படாதது மற்றும் பிறக்கும்போதே சில உடல்நல குறைப்பாடுகளை கொண்டிருந்ததுதான் கொரோனா பாதிப்பிற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அக்டோபர் 10 அன்று குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர் இரண்டு நாட்களில் இறந்தார். முன்னதாக, கடந்த ஆண்டு இதுபோன்ற மூன்று இறப்புகள் இருந்தன. அதே நேரத்தில் 2020 மற்றும் 2021இல் இதுபோன்ற இறப்புகள் எதுவும் சிங்கப்பூரில் நிகழவில்லை. இதையடுத்து நடைமுறையில் உள்ள பரிந்துரைகளின்படி, ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசிகளை புதுப்பிக்காமல் இருந்தால் உடனடியாக தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.