இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது ஹிஸ்புல்லா அமைப்பு: 12 பேர் பலி
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் நேற்று கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்கவில்லை. ஆனால், இது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதல் தான் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. காசாவில் வேறு போர் நடந்து வரும் நிலையில், கோலன் ஹைட்ஸ் மீதான தாக்குதல் நிலைமை இன்னும் மோசமாக்கக்கூடும் என்ற பதட்டம் நிலவி வருகிறது.
தாக்குதலை நடத்தவில்லை என்று ஹிஸ்புல்லா மறுப்பு
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் இருக்கும் மஜ்தல் ஷம்ஸ் கிராமத்தில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 1967 மத்திய கிழக்குப் போரின் போது இஸ்ரேலால் சிரியாவிலிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசம் இதுவாகும். பெரும்பாலான நாடுகளால் அங்கீகரிக்கப்படாத இஸ்ரேல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். "ஹிஸ்புல்லா இதுவரை செலுத்தாத ஒரு பெரிய விலையை கொடுக்கும்," என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலில் உள்ள ட்ரூஸ் சமூகத்தின் தலைவருடனான தொலைபேசி அழைப்பில் கூறியுள்ளார். "இஸ்லாமிய எதிர்ப்பிற்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் இது தொடர்பான அனைத்து தவறான குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக எங்கள் அமைப்பு மறுக்கிறது." என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது.