டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 22 வயதான இடது கை பேட்டர் ஜெய்ஸ்வால், பெர்த் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டின் 2வது நாளில் இந்த சாதனையை நிகழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் டக் டக் ஆன போதிலும், ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அற்புதமான அரை சதத்துடன் வலுவான மறுபிரவேசம் செய்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் இந்த ஆண்டில் டெஸ்டில் அவரது சிக்ஸர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்
இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், பிரண்டன் மெக்கல்லத்தின் முந்தைய 2014ல் 33 சிக்ஸர்கள் சாதனை முறியடிக்கப்பட்டது. பிரண்டன் மெக்கல்லம் 9 போட்டிகளில் 33 சிக்சர்களை அடித்த நிலையில், ஜெய்ஸ்வால் 12 டெஸ்டில் இந்த சாதனையை படைத்தார். ஜெய்ஸ்வால் மற்றும் மெக்கல்லம் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (26 சிக்சர்கள்), ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் வீரேந்திர சேவாக் (தலா 22 சிக்சர்கள்) உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57.57 சராசரியில் 1,209 ரன்களுடன், இந்த ஆண்டு டெஸ்டில் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.