உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தேதியை உறுதி செய்தது ஐசிசி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சியின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7-11 வரை நடைபெறுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை (பிப்ரவரி 8) இதை உறுதிப்படுத்தியது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இந்த ஆண்டு இறுதிப்போட்டியில் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 2021இல் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2021 இல் சவுத்தாம்ப்டனில் நடந்தது. இதில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அணிகள்
நடப்பு சாம்பியன் நியூசிலாந்து இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்து வெளியேறிவிட்டனர். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் இறுதிப் போட்டி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் டிரா செய்தாலே வாய்ப்பு முழுமையாக உறுதியாகிவிடும். மறுபுறம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை குறைந்தபட்சம் 2-0 என்ற கணக்கில் வென்றால் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துவிடலாம். இந்தியா டெஸ்ட் தொடரை மோசமாக இழந்துவிட்டால், அடுத்து இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முறையே நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் மோதும் போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே வாய்ப்பு யாருக்கு என்பது உறுதியாகும்.