மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் எடுக்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீராங்கனைகள்
மகளிர் பிரிமியர் லீக்கின் முதல் சீசனுக்கான ஏலம் திங்களன்று (பிப்ரவரி 13) நடந்து முடிந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வெளிநாட்டு வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் வெளிநாட்டு வீராங்கனைகளில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். வெளிநாட்டு வீரர்கள் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கிறார்கள் என்ற கருத்து இருந்தபோதிலும், ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட சிலர் விற்கப்படாத சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த வீராங்கனைகளின் பட்டியலை இதில் பார்க்கலாம்.
ஏலத்தில் எடுக்கப்படாத வெளிநாட்டு வீராங்கனைகளின் முழு விபரம்
நியூசிலாந்தின் பேட்டிங் ஆல் ரவுண்டர் சுசி பேட்ஸின் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக இருந்த நிலையில், எந்த அணியும் இவரை எடுக்கவில்லை. மகளிர் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் ஆல்-ரவுண்டர்களில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் கேப்டன் சுனே லூஸ் மற்றும் பேட்டர் லாரா வோல்வார்ட் எந்த அணியாலும் ஏலம் எடுக்கவில்லை. இருவரின் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக இருந்தது. இங்கிலாந்தின் சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கேத்தரின் ப்ரன்ட் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக இருந்த நிலையில், அவரையும் வாங்க அணிகள் ஆர்வம் காட்டவில்லை. இலங்கையின் பேட்டிங் ஆல்ரவுண்டர் சாமரி அத்தபத்து அடிப்படை விலை ரூ. 30 லட்சமாக இருந்த நிலையில், அவரும் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.