
மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள்
செய்தி முன்னோட்டம்
திங்கட்கிழமை (பிப்ரவரி 13) நடந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் பலரையும் மிக அதிகபட்ச தொகை கொடுத்து ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன.
மகளிர் ஐபிஎல் முதல் முறையாக 2023 ஆம் ஆண்டில் நடக்க உள்ளது. அணிகள் ஏலம், மீடியா உரிமை ஏலம் என பிசிசிஐ கடந்த சில வாரங்களாக மகளிர் ஐபிஎல்லுக்கான பணிகளை முடுக்கி விட்டது.
இதையடுத்து மார்ச் 4 ஆம் தேதி மகளிர் ஐபிஎல் முதல் சீசன் தொடங்க உள்ள தகவலும் வெளியான நிலையில், திங்கட்கிழமை வீராங்கனைகளுக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் வீராங்கனைகளின் அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் இருந்த நிலையில், இந்திய வீராங்கனைகள் பலரையும் அதிக விலை கொடுத்து, அணிகள் போட்டி போட்டு வாங்கியுள்ளன.
மகளிர் ஐபிஎல்
அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய வீராங்கனைகளின் முழு பட்டியல்
ஏலத்தில் முதல் நபராக களமிறக்கப்பட்ட இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி ரூ. 3.40 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்டார்.
இதற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா உபி வாரியர்ஸ் அணியால் ரூ.2.60 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் இளம் பேட்டிங் நட்சத்திரம் ஜெமிமா ரோட்ரிக்ஸை வாங்க பல அணிகள் போட்டியிட்ட நிலையில், டெல்லி கேபிடல்ஸ் ரூ. 2.20 கோடிக்கு கைப்பற்றியது.
சமீபத்தில் யு19 மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத்தந்த ஷஃபாலி வர்மா டெல்லி கேபிடல்ஸில் அணியால் ரூ. 2.00 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
எனினும், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரூ.1.80 கோடிக்கு மட்டுமே வாங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.