மகளிர் டி20 உலகக்கோப்பை : டக்வொர்த் லூயிஸ் முறையில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
திங்களன்று (பிப்ரவரி 21) அயர்லாந்தை வீழ்த்தி ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியை இந்தியா எட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 87 ரன்களை குவித்தார். அயர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் லாரா டெலனி இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 156 ரன்கள் எனும் இலக்குடன் அயர்லாந்து ஆட்டத்தை தொடங்கிய நிலையில், இடையில் மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் தனது இடத்தை உறுதி செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுரின் சாதனைகள்
இந்த போட்டியில் மந்தனா 3 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் உட்பட 87 ரன்கள் எடுத்தார். இது அவரது 22வது அரைசதமாகும் மற்றும் டி20யில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். மேலும் அவர் 2,800க்கும் அதிகமான ரன்களுடன் தற்போது மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த ஆறாவது பேட்டர் ஆவார். இதற்கிடையே, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உலக டி20 போட்டிகளில் 3,000 ரன்களை கடந்த ஐந்தாவது வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். மேலும் ஆடவர் மற்றும் மகளிர் டி20 என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.