நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்கள் : 2026 ஃபிஃபா உலகக்கோப்பை விதிகளில் மாற்றம்
ஃபிஃபா செவ்வாயன்று (மார்ச் 14) 2026 உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும் வகையில் போட்டியை விரிவுபடுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இதற்கு முன்பு நடந்த 64 ஆட்டங்களுக்குப் பதிலாக, 2026 இல் மொத்தம் 104 ஆட்டங்கள் இருக்கும் என்று ஃபிஃபா அறிவித்தது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து 2026 ஃபிஃபா உலகக்கோப்பையை நடத்த உள்ளது. முன்னதாக 3 அணிகள் கொண்ட 16 குழுவாக இந்த போட்டியின் குழுநிலை ஆட்டங்களை திட்டமிருந்த நிலையில், இது தற்போது 4 அணிகள் கொண்ட 12 குழுவாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இறுதிப்போட்டி வரை முன்னேறும் அணி அதிகபட்சமாக 8 போட்டிகளில் விளையாடும். முன்னதாக இது ஏழு போட்டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றம் குறித்து ஃபிஃபா அறிக்கை
ஃபிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு :- விளையாட்டு ஒருமைப்பாடு, வீரர் நலன், குழு பயணம், வணிக மற்றும் விளையாட்டு ஈர்ப்பு, அத்துடன் குழு மற்றும் ரசிகர்களின் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட ஒரு முழுமையான மதிப்பாய்வின் அடிப்படையில், ஃபிஃபா கவுன்சில் 16 குழுக்களின் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 போட்டி வடிவமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதன் படி நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்களில் இருந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு மற்றும் எட்டு சிறந்த மூன்றாவது இடங்களைப் பெறும் அணிகள் 32 சுற்றுக்கு முன்னேறும். திருத்தப்பட்ட வடிவம் அணிகளுக்கு போதிய வாய்ப்பை தருவதை உறுதி செய்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.