காமன்வெல்த் விளையாட்டு 2026: கிரிக்கெட் நீக்கப்படக் காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
கடந்த 2022 ஆம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிக்குக் திரும்பிய கிரிக்கெட், தற்பொழுது தொடங்கவுள்ள 2026 கிளாஸ்கோ தொடரில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலுமே கிரிக்கெட் போட்டி இடம்பெறாது என்று போட்டி அமைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ரத்து பின்னணி
ஆஸ்திரேலியா போட்டியை ரத்து செய்த பின்னணி
உண்மையில் 2026 காமன்வெல்த் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் தான் நடத்துவதாக இருந்தது.
ஆனால், போட்டிகளை நடத்துவதற்கான செலவு தோராயமாக 6 முதல் 7 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக (கிட்டத்தட்ட 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கைமீறி உயர்ந்து கொண்டே சென்றது.
இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, கடந்த 2023 ஜூலை மாதத்தில் விக்டோரியா மாநில அரசு இந்த போட்டிகளை நடத்தும் உரிமையை கைவிட்டு, தொடரையே ரத்து செய்வதாக அறிவித்தது.
ஸ்காட்லாந்து
கடைசி நேரத்தில் கைகொடுத்த ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர்
போட்டியின் எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர் போட்டியை நடத்தக் கடைசி நேரத்தில் முன்வந்தது.
காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் உள்ளூர் அமைப்பாளர்கள், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் போட்டியை நடத்தி முடிக்கத் திட்டமிட்டனர்.
இதற்காக கடந்த முறை பர்மிங்ஹாமில் 19 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்த நிலையில், கிளாஸ்கோவில் வெறும் 4 விளையாட்டு மையங்களை மட்டும் பயன்படுத்தி 10 விளையாட்டுகள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டது.
நீக்கம்
பட்ஜெட் குறைப்பால் பல முக்கிய விளையாட்டுகள் நீக்கம்
கடுமையான நிதி சிக்கனம் மற்றும் பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக, பர்மிங்ஹாம் 2022 இல் இடம்பெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியோடு சேர்த்து, ஹாக்கி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் மற்றும் ரக்பி உள்ளிட்ட பல புகழ்பெற்ற விளையாட்டுகளும் 2026 பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டன.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் உட்புற அரங்குகள் மற்றும் தடகள மைதானங்களை மட்டுமே பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய விளையாட்டுகளுக்கு மட்டுமே இந்த முறை முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
செலவுகள்
கிரிக்கெட் போட்டியை நடத்த ஆகும் செலவுகள்
கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை அதிகளவிலான வீரர்கள் கொண்ட பெரிய அணிகள், பிரத்யேகப் புல்வெளி ஆடுகளப் பராமரிப்பு மற்றும் மைதானப் பராமரிப்புச் செலவுகள் என அமைப்பாளர்களுக்கு நிதிச் சுமையை அதிகமாக ஏற்படுத்தும்.
மைதானங்களை மாற்றி அமைப்பதற்கான செலவைக் குறைக்கவும், பிற செலவுகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் கிளாஸ்கோ நிர்வாகம் இந்த கடினமான முடிவை எடுத்தது.
இதன் காரணமாகவே 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.