புத்தாண்டின் முதல் டெஸ்ட் போட்டிக்காக பிங்க் தொப்பிக்கு மாறிய ஆஸ்திரேலிய வீரர்கள்
புதன்கிழமை (ஜனவரி 3) முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா பங்கேற்கிறது. இதையொட்டி, போட்டிக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பிங்க் நிற தொப்பிகளை அணிந்து அணியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வழக்கமாக, ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பச்சை தொப்பி அணிந்து விளையாடும் நிலையில், இந்த போட்டியில் பிங்க் நிற தொப்பியை அணிந்து விளையாட உள்ளனர். மேலும், இந்த போட்டி, பிங்க் டெஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு ஒரு வரலாறு உள்ளதை போல், இந்த பிங்க் டெஸ்ட் என்பதற்கும் ஒரு வரலாறு உள்ளது.
பிங்க் டெஸ்ட் போட்டியின் வரலாற்று பின்னணி
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. போட்டியின் போது மைதானத்தைச் சுற்றியுள்ள ஸ்டாண்டுகள் மற்றும் அடையாளங்கள், நடுவில் உள்ள ஸ்டம்புகள் உட்பட அனைத்தும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 2005 இல் மெக்ராத் தனது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மெக்ராத் அறக்கட்டளையைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக நிதி சேகரிக்கவும் பிங்க் டெஸ்ட் விளையாடப்படுகிறது. ஜேன் இறந்து ஒரு வருடம் கழித்து, 2009 இல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே முதல் பிங்க் டெஸ்ட் நடந்தது. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி அந்த வரிசையில் 16வது போட்டியாகும்.