Page Loader
இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங் குடும்பத்தினர் பங்கேற்க தடை
இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங் குடும்பத்தினர் பங்கேற்க தடை

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங் குடும்பத்தினர் பங்கேற்க தடை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2023
02:57 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அவரது மகனும் துணைத் தலைவருமான கரண் பூஷன் சிங் ஆகியோர் வரவிருக்கும் மல்யுத்த சம்மேளன தேர்தலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யாகவும் உள்ள பூஷன், ஆறு முக்கிய மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரிஜ் பூஷன் மற்றும் அவரது மகன் பட்டியலில் இடம் பெறாத நிலையில், அவரது மருமகன் விஷால் சிங் பீகார் மாநில பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரும் எந்த உயர் பதவிக்கும் போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது.

brij bhushan family dominance comes to end

பிரிஜ் பூஷன் சரண் சிங் குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி

பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த மல்யுத்த வீரர்களுக்கு முன்னதாக உறுதியளித்ததை அடுத்து தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே பிரிஜ் பூஷன் 12 ஆண்டுகள் சம்மேளன தலைவராக இருந்துள்ளதால், இதற்கு மேல் அவரால் போட்டியிட முடியாது. மேலும் அவரது குடும்பம் முழுவதுமாக விலக்கப்பட்டுள்ளதால், இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் அவரது குடும்ப ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையில், ஹரியானாவைச் சேர்ந்த 2010 காமன்வெல்த் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன், ஒடிசாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சாட்சியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.