கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்!
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022இல் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து தேர்வுக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சேத்தன் சர்மா, இந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் அதே பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஜீ மீடியா நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றில், சேத்தன் சர்மா இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அதன் வீரர்கள் குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். குறிப்பாக, அவர் இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேத்தன் சர்மா பேச்சின் முழு விபரம்
2021 டிசம்பரில் கோலி ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் டி20 தலைமை பொறுப்பையும் கைவிட முடிவு செய்த பிறகு, ரோஹித் இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது குறித்து பேசியுள்ள சேத்தன் சர்மா, ரோஹித்தை கேப்டனாக்குவது தாங்கள் விரும்பி எடுத்த முடிவு அல்ல என்றும், பிசிசிஐ கோலியை விரைவில் வெளியேற்ற விரும்பியதால் மட்டுமே செய்யப்பட்டது என்றார். நாட்டின் முதன்மையான பேட்டரை இப்படி அவமானப்படுத்தியிருக்கக்க கூடாது என அவர் கோலிக்கு ஆதரவாக அதில் பேசியிருந்தாலும், கோலி தன்னை எல்லோரையும் விட மேலாக நினைத்து தான்தோன்றித்தனமாக செயல்பட்டதால் தான் பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.