பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்!
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய திருப்பமாக, அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் பஞ்சாப் மாகாணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட நாட்களாக விளையாடாமல் இருக்கும் ரியாஸ், பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்று வருகிறார். அங்கிருந்து நாடு திரும்பியதும் அமைச்சர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது.
ரியாஸின் நியமனத்தை பஞ்சாப் தற்காலிக முதல்வர் மொஹ்சின் நக்வி வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) உறுதிப்படுத்தினார்.
மூன்று அல்லது நான்கு மாதங்களில் பஞ்சாப் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுவரை அவர் இப்பதவியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வஹாப் ரியாஸ்
அமைச்சர் பதவியோடு விளையாட்டையும் தொடர்வார் வஹாப் ரியாஸ்!
37 வயதான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப், பிப்ரவரியில் தொடங்கவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (பிஎஸ்எல்) ஒரு பகுதியாக உள்ளார்.
இதில் ரியாஸை பெஷாவர் சல்மி அணியில் தக்க வைத்துக் கொண்டது. பிஎஸ்எல்லில் 103 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார்.
அமைச்சராக அறிவிக்கப்பட்ட நிலையில், லீக்கில் அவர் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை என்றாலும், அவர் பாகிஸ்தான் லீக்கில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வஹாப் கடைசியாக 2020 இல் பாகிஸ்தானுக்காக விளையாடினார் மற்றும் 27 டெஸ்ட், 91 ஒருநாள் மற்றும் 36 டி20 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
கடைசியாக 2020 டிசம்பரில் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொண்ட போது டி20 போட்டியில் தனது தேசிய அணிக்காக இடம்பெற்றார்.