30 சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் விராட் கோலி தனது 375 நாள் சத வறட்சியை அழுத்தமான முறையில் முடித்துக் கொண்டார். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) போட்டியின் மூன்றாவது நாளில் அவர் 100 ரன்கள் (நாட் அவுட்) எடுத்து சதமடித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 30வது சதமாகும். ஆஸ்திரேலியாவில் இது அவரது ஏழாவது டெஸ்ட் சதமாகும். இந்த சதம் மூலம், தனது ஃபார்ம் குறித்து எதிர்கொண்டு வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையே, இந்த சாதனையின் மூலம், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் ரெகார்டை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் 29 சதங்களை எடுத்துள்ள நிலையில், அதை இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி தனது 30வது சதம் மூலம் முறியடித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து அதிக சதம் அடித்தவர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி முறியடித்தார். முன்னதாக, இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸ் 9 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், 10 சதங்களுடன் விராட் கோலி அதை முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸின் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் தலா 7 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.