'இதுதான் எல்லாம்'; டெஸ்ட் கிரிக்கெட் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி மோதவுள்ளது. நவம்பர் 19 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒரு மாத இடைவெளிக்கு பிறகு விராட் கோலி மீண்டும் இதில் களத்திற்கு திரும்பும் நிலையில், அவர் மீது பார்வை குவிந்துள்ளது. இந்தியா தென்னாப்பிரிக்காவில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. கடைசி டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலியின் தலைமையில் இந்தியா முதல் போட்டியில் வென்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் தோற்றது. அந்த தொடரின் முதல் போட்டியில் மட்டுமே விளையாடிய விராட் கோலி, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது குறித்து விராட் கோலி பேட்டி
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னதாக, தனது டெஸ்ட் பயணம் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் விளையாட்டின் அடித்தளம். இது வரலாறு. இது பாரம்பரியம். இதுதான் எல்லாம். ஒரு தனிநபராக, ஒரு அணியாக, நீண்ட இன்னிங்ஸ் விளையாடி, உங்கள் அணியை ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றால் கிடைக்கும் வேலை திருப்தி என்பது ஒரு தனி உணர்வு. நான் ஒரு பாரம்பரியவாதி, அதனால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்னைப் பொறுத்தவரை உண்மையிலேயே பெருமைக்குரியது. நாட்டிற்கான டெஸ்ட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும் என்ற எனது கனவை தொடர்கிறேன்." என்று கூறினார். ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு விராட் கோலி அளிக்கும் முதல் பேட்டி இதுவாகும்.