கோலி மீண்டெழுவார்! முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை!
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிகள் இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 9) மோதுகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோலியின் ஃபார்ம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஹர்பஜன், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்கவைக்க விரும்பினால், கோலி முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிக்கவில்லை என்றாலும், அவர் தற்போது முழு ஃபார்மில் இருப்பதால், நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் சமீபத்திய செயல்திறன்
கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் சொதப்பி வந்த விராட் கோலி, 2022இல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது ஃபார்மை மீட்டுள்ளார். தனது தலைமுறையின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராகக் கருதப்படும் கோலி, செப்டம்பர் 2022ல் இருந்து நான்கு சதங்களை அடித்துள்ளார். மேலும், கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் 48.05 சராசரியுடன்1,682 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஏழு சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும். எனினும் அவர் கடைசியாக 2019இல் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்துள்ளார். தற்போது முழு ஃபார்மில் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நிலையை உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.