இந்தியா vs ஆஸ்திரேலியா : நாக்பூர் மைதானத்தின் புள்ளி விபரங்கள்!
வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதலுக்கு தயாராகி வருகின்றன. வியாழக்கிழமை முதல் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. நாக்பூரில் மைதானத்தை பொறுத்தவரை, கடைசியாக நவம்பர் 2017இல் இந்தியா-இலங்கை இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். ஆர் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா மொத்தம் 13 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இங்கு விளையாடிய 6 டெஸ்டில் நான்கில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் இந்தியாவுக்கு சாதகமா?
2008/09 பார்டர்-கவாஸ்கர் தொடரின் போது இந்த மைதானத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் முறையாக விளையாடின. போட்டியின் முதல் இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்ததன் மூலம், அந்த டெஸ்டில் இந்தியா 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார். சுவாரஸ்யமாக, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஜேசன் கிரெஜா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாக்பூர் மைதானம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியில் குறைந்தபட்சம் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின், ஜடேஜா நிச்சயம் இடம்பெறும் நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.