IND vs AUS : மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூருக்கு மாற்றம்! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிசிசிஐ திங்கட்கிழமை (பிப்ரவரி 13) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தர்மசாலாவில் கடுமையான குளிர்காலம் நிலவுவதாலும், அவுட்ஃபீல்டில் போதுமான புல் அடர்த்தி இல்லாதது மற்றும் புல் முழுமையாக வளர்ச்சியடைய சிறிது காலம் தேவைப்படும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனினும் இரண்டாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டபடி முறையே டெல்லி மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும் என பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தூர் மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன்
இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தை பொறுத்தவரை, இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. ஒரு போட்டியில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 321 ரன்கள் வித்தியாசத்திலும், மற்றொரு போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 2016இல் நடந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா எடுத்த 557/5 ரன்கள், இந்த மைதானத்தில் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இதே ஆட்டத்தில் விராட் கோலி எடுத்த 211 ரன்கள் தான் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். பந்துவீச்சைப் பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் முறையே 6 மற்றும் 7 விக்கெட்டுகளை எடுத்ததே அதிகபட்சமாகும்.