Loading...
ஆசிய சாம்பியனை வீழ்த்திய சேலத்துக்காரர்! புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் வேலவன் செந்தில்குமார் அபாரம்
புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் வேலவன் செந்தில்குமார் அபாரம்

ஆசிய சாம்பியனை வீழ்த்திய சேலத்துக்காரர்! புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் வேலவன் செந்தில்குமார் அபாரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 27, 2026
09:33 am

செய்தி முன்னோட்டம்

ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் புடாபெஸ்ட் ஓபன் 2026 சர்வதேச தொழில்முறை ஸ்குவாஷ் தொடரில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய நட்சத்திர வீரர் வேலவன் செந்தில்குமார் அபாரமாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இத்தொடரின் காலிறுதிப் போட்டியில், தொடரின் முதன்மை வீரரும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியனுமான மலேசியாவின் ஈன் யோ ந்ங் என்பவரை 3-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வேலவன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

சாதனை

சேலத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் சாம்பியனின் மைல்கல் சாதனை

1998 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று தமிழ்நாட்டின் சேலத்தில் பிறந்த வேலவன் செந்தில்குமார், சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் தரவரிசையில் உலகளவில் 39வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் பட்டத்தை வென்ற இவர், ஆசிய அணி சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் போட்டிகளில் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இரட்டையர் சாம்பியன்ஷிப்பில் அபய் சிங்குடன் இணைந்து மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதி

அரையிறுதியில் மோதும் இரண்டு இந்திய வீரர்கள்

புடாபெஸ்ட் ஓபன் தொடரில் 9/16 வரிசை வீரராகக் களம் கண்ட வேலவன், ஜெர்மனியின் ரஃபேல் கான்ட்ரா மற்றும் இங்கிலாந்தின் வில் சால்டர் ஆகிய முன்னணி வீரர்களை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

தற்போது முதன்மை தரவரிசை வீரரை வீழ்த்தியுள்ளதன் மூலம், அரையிறுதி ஆட்டத்தில் மற்றொரு இந்திய நட்சத்திர வீரரான வீர் சோத்ரானியை எதிர்கொள்ளவுள்ளார்.

இதனால் இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு இந்திய வீரர் தடம் பதிப்பது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT