LOADING...
மறுபடியும் ஃபார்முக்கு வந்த வருண்! வரலாற்று சாதனையுடன் ஆட்டநாயகன் விருது வென்ற வருண் சக்ரவர்த்தி
200 டி20 விக்கெட்டுகளைக் கடந்து வருண் சக்ரவர்த்தி சாதனை

மறுபடியும் ஃபார்முக்கு வந்த வருண்! வரலாற்று சாதனையுடன் ஆட்டநாயகன் விருது வென்ற வருண் சக்ரவர்த்தி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 19, 2026
08:19 pm

செய்தி முன்னோட்டம்

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 28வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மீண்டும் தனது பழைய அதிரடி ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையைத் தனது மாயாஜால சுழலால் நிலைகுலைய வைத்தது மட்டுமின்றி, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கடந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்ததற்காக, அவருக்குப் போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சாதனை

வரலாற்றுச் சாதனை: 200 டி20 விக்கெட்டுகள்

ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்தியதன் மூலம், தனது 155வது இன்னிங்ஸில் 200 விக்கெட்டுகளை வருண் சக்ரவர்த்தி எட்டியுள்ளார். இதற்கு முன்பு குல்தீப் யாதவ் (160 இன்னிங்ஸ்கள்) வசம் இருந்த சாதனையை முறியடித்து, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒட்டுமொத்த இந்தியர்களில் அர்ஷ்தீப் சிங் (151 இன்னிங்ஸ்கள்) மட்டுமே வருணை விட அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அதிவேகமாக 200 டி20 விக்கெட்டுகளைக் கடந்த இந்தியர்கள் (இன்னிங்ஸ்கள்): அர்ஷ்தீப் சிங் - 151 வருண் சக்ரவர்த்தி - 155 குல்தீப் யாதவ் - 160 ஜெயதேவ் உனட்கட் - 162 முகமது ஷமி - 165

சுழல் ஆதிக்கம்

ராஜஸ்தான் சரிவும், வருணின் சுழல் ஆதிக்கமும்

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, வைபவ் சூர்யவன்ஷி (46) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (39) ஆகியோரின் சிறப்பான தொடக்கத்தால் 63/0 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், ஒன்பதாவது ஓவரில் அறிமுகமான வருண் சக்ரவர்த்தி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். தனது முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷியை வெளியேற்றிய அவர், ராஜஸ்தான் அணியின் ரன் வேகத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தினார். அவருக்குத் துணையாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, ராஜஸ்தான் அணி 155/9 என்ற குறைவான ஸ்கோரிலேயே முடிந்தது.

Advertisement

பந்துவீச்சு

வருண் சக்ரவர்த்தியின் அபார பந்துவீச்சு

வருண் சக்ரவர்த்தி தனது 4 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஓவர்களை வீசி, எதிரணி வீரர்களுக்குப் பந்துகளைப் புரிந்துகொள்ளவே வாய்ப்பளிக்கவில்லை. டெத் ஓவர்களில் கார்த்திக் தியாகியும் 3/22 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்ய உதவினார். வருணின் இந்தத் துல்லியமான மற்றும் சிக்கனமான பந்துவீச்சு, கேகேஆர் அணிக்கு இந்தத் தொடரின் மிக முக்கியமான வெற்றியைப் பெற்றுத் தந்தது.

Advertisement