இந்திய 'ஏ' அணியில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம்! இலங்கை முத்தரப்பு தொடருக்கான அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதமடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய 'ஏ' அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 175 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றிய இவர், நடப்பு ஐபிஎல் 2026 தொடரிலும் 11 இன்னிங்ஸ்களில் 440 ரன்களைக் குவித்து மிரட்டி வருகிறார். குறிப்பாக, 236.56 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 40 சிக்ஸர்களை விளாசி தொடரில் முதலிடத்தில் இருக்கும் இவருக்கு, இந்த 'ஏ' அணி வாய்ப்பு உரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
திலக் வர்மா
திலக் வர்மா தலைமையில் வலுவான இந்திய 'ஏ' அணி
ஜூன் 2026ல் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியைத் திலக் வர்மா வழிநடத்தவுள்ளார். அதிரடி வீரர் ரியான் பராக் அவருக்குத் துணையாகச் செயல்படுவார். அணியில் அனுபவம் மற்றும் இளமைத் துடிப்பு சரிசமமாகக் கலந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், அன்ஷுல் கம்போஜ் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் போன்ற வீரர்களும் இந்த 15 பேர் கொண்ட அணியில் தங்களின் இடத்தைப் பிடித்துள்ளனர்.
அட்டவணை
முத்தரப்பு தொடரின் அட்டவணை மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள்
இந்த முத்தரப்பு தொடர் ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய 'ஏ' அணி, போட்டியை நடத்தும் இலங்கை 'ஏ' அணியை எதிர்கொள்கிறது. டபுள் ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெறும் இத்தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒயிட்பால் போட்டிகள் அனைத்தும் தம்புல்லாவில் நடைபெறவுள்ளன. இதுதவிர, இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக இரண்டு பலநாட்கள் கொண்ட சிவப்புப்பந்து போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. அந்தப் போட்டிகள் காலே மைதானத்தில் நடைபெறும். ரெட் பால் போட்டிகளுக்கான அணி விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நட்சத்திரங்களின் ஆதிக்கம்
டி20 அதிரடியை ஒருநாள் போட்டிகளில் வெளிப்படுத்தப் போகும் இளம் வீரர்கள்
இந்திய 'ஏ' அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களின் முத்திரையைப் பதித்தவர்கள். குறிப்பாக, வேகப்பந்து வீச்சில் யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். விக்கெட் கீப்பர்களாகப் பிரப்சிம்ரன் சிங் மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிடில் ஆர்டரில் ஆயுஷ் பதோனி மற்றும் நிஷாந்த் சிந்து போன்ற ஆல்-ரவுண்டர்கள் அணிக்குச் சமநிலையை வழங்குகின்றனர். இந்த இளம் வீரர்கள் இலங்கையின் ஆடுகளங்களில் தங்களின் திறமையை நிரூபிக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இத்தொடர் அமையவுள்ளது.
அணி விவரம்
முழுமையான இந்திய 'ஏ' அணி விவரம்
இலங்கை முத்தரப்பு தொடருக்கான இந்திய 'ஏ' அணி: திலக் வர்மா (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (துணை கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), விப்ராஜ் நிகாம், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷத் கான். இந்த வலுவான அணி இலங்கையில் கோப்பையை வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.