ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி : இந்தியாவின் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டம் என தகவல்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியா விளையாடும் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக, 2025இல் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்திருந்தது. ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் சூழல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி நீண்ட காலமாக பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்து வருகிறது. முன்னதாக, இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்பு, பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்ததால், போட்டி ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபியையும் ஹைபிரிட் முறையில் நடத்த கோரிக்கை
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போதும் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்பதில் பிசிசிஐ உறுதியாக இருந்து வருகிறது. மேலும், இந்தியா நடத்தும் போட்டியை மட்டுமோ அல்லது முழு தொடரையுமோ வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் பிசிசிஐ வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், துபாயில் உள்ள ஐசிசி தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு விழாவின்போது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியங்களின் நிர்வாகிகள் ஐசிசி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அவர்கள் என்ன விவாதித்தனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபபடவில்லை என்றாலும், இந்தியா தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹைபிரிட் முறையில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.