டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்! ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை சாதனை!
டி20 போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை நிகழ்த்தியுள்ளார். சனிக்கிழமையன்று (பிப்ரவரி 4) பிக் பாஷ் லீக் (பிபிஎல்) 2022-23 இறுதிப் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஆண்ட்ரூ, பிரிஸ்பேன் ஹீட்டிற்கு எதிராக தனது நான்கு ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து தனது 300வது விக்கெட்டைப் பெற்றார். இதன் மூலம் ரஷித் கானை பின்னுக்குத் தள்ளி 300 டி20 விக்கெட்களை விரைவாக எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ரஷித் கானின் சாதனை முறியடிப்பு
ஆண்ட்ரூ டை 211 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் 300 விக்கெட்களைக் கொண்டுள்ளார். அவர் தனது 208வது இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டினார். முன்னதாக 2020ல், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித், டி20யில் வேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். ரஷித் 213 போட்டிகளில் மைல்கல்லை எட்டினார். அதற்கு முன்னதாக, 222 போட்டிகளில் 300 டி20 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து லசித் மலிங்கா முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஆண்ட்ரூ பிக் பாஷ் லீக்கில் 144 விக்கெட்களை கைப்பற்றி, இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார். மேலும், ஆண்ட்ரூ ஆஸ்திரேலியாவுக்காக 32 போட்டிகளில், 47 விக்கெட்களை எடுத்துள்ளார். 30 ஐபிஎல் போட்டிகளில், அவர் 42 விக்கெட்களை எடுத்துள்ளார்.