IND vs AUS 1st Test : அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகள்! டோட் முர்பி சாதனை!
டோட் முர்பி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 35 வது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆனார். இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஆஃப்-ஸ்பின்னர் முர்பி இந்த மைல்கல்லை எட்டினார். முதல் நாளில் கேஎல் ராகுலை (20) வீழ்த்திய முர்பி, இரண்டாவது நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் (23), சேதேஷ்வர் புஜாரா (7), விராட் கோலி (16) மற்றும் கே.எஸ்.பாரத் (8) ஆகியோரை வெளியேற்றினார். இதன் மூலன் அறிமுக டெஸ்ட் போட்டி முர்பிக்கு மறக்க முடியாத போட்டியாக மாறியுள்ளது.
மிக வேகமாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முர்பி
முர்பி தனது டெஸ்டில் அறிமுகமாகும் முன் வெறும் ஏழு முதல்தர மற்றும் 14 லிஸ்ட்-ஏ போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 22 வயதான முர்பி, இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் மற்றும் லெக் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சன் ஆகியோர் அணியில் இருந்தும் ஆடும் லெவெனில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். முர்பி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்த மூன்றாவது ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் ஆனார். இதற்கு முன்பாக நாதன் லியோன் மற்றும் ஜேசன் கிரெஜா அறிமுக போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். சுவாரஸ்யமாக, 2008ல் இதே நாக்பூர் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக கிரெஜா இந்த சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.