இதே நாளில் அன்று : ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி கும்ப்ளே சாதனை!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், லெக் ஸ்பின்னருமான அனில் கும்ப்ளே 1999 ஆம் ஆண்டு இதே நாளில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் எனும் சாதனை படைத்தார். அதற்கு முன்னர் இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தார். 24 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியம் என அழைக்கப்படும் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சாதனை படைத்தார்.
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்
கும்ப்ளே சரித்திரம் படைத்த போட்டியின் புள்ளி விபரங்கள்
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 420 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாகித் அப்ரிடி மற்றும் சயீத் அன்வர் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்ததால் பாகிஸ்தான் வெற்றி பெறும் என பலரும் நினைத்தனர். ஆனால், அப்போது கும்ப்ளே அதிரடியாக களமிறங்கி பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை நாசமாக்கினார். ஜம்போ என்று அழைக்கப்படும் முதலில் 25வது ஓவரில் அப்ரிடியை வெளியேற்றினார். கும்ப்ளேவின் சுழலில் பாகிஸ்தான் சிறிது நேரத்தில் 128/6 என்று முடங்கியது. கும்ப்ளே பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் அவர் 61வது ஓவரில் வாசிம் அக்ரமை ஆட்டமிழக்கச் செய்து பத்தாவது விக்கெட்டைப் பெற்றார். இந்த முயற்சியால் இந்தியா 212 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்ய முடிந்தது.