"அது ரகசியம் சொல்ல முடியாது" : சஸ்பென்ஸ் வைத்த ஹர்திக் பாண்டியா! பின்னணி இது தான்!
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பிறகு, மும்பையின் வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது குடும்ப வேலை காரணமாக முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருவதால், இந்த போட்டியில் அவருக்கு எந்த அழுத்தமும் இருக்காது. ஆனால், அவர் எத்தனை ஓவர்கள் பந்துவீசுவார் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
முழுமையாக பந்துவீசுவாரா ஹர்திக் பாண்டியா?
2019 ஆம் ஆண்டு முதுகு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதிலிருந்து, ஹர்திக் பெரும்பாலான போட்டிகளில் தனது முழு ஒதுக்கீட்டு ஓவர்களையும் வீசுவதில் இருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, 10 ஓவர்கள் முழுவதுமாக பந்து வீசத் தயாரா என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டதற்கு ஹர்திக் சஸ்பென்ஸ் வைத்து பேசினார். ஒரு பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்த ஹர்திக், "அது ஒரு ரகசியம். நான் ஏன் இங்கே சொல்ல வேண்டும். நான் பந்துவீசாமல் இருக்க அவர்கள் தயாராகட்டும்." என்றார். மேலும், "சூழ்நிலைக்கு ஏற்றது எதுவோ அதை நான் செய்வேன். என்னால் அதிகமாக பந்து வீச முடியும் என்று நினைத்தால், நான் பந்து வீசுவேன்." என்று அவர் மேலும் கூறினார்.