
புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா
செய்தி முன்னோட்டம்
தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக பழம்பெரும் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா அறிவித்துள்ளார்.
தற்போது 66 வயதான மார்ட்டினா நவ்ரத்திலோவா, தனக்கு உரிய சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஸ்லோன் கெட்டரிங்கில் ஒரு நாள் முழு சோதனைக்குப் பிறகு, நான் முழுமையாக குணமடைந்துள்ளதை அறிந்தேன்! அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் கதிர்வீச்சு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனவரி 2023 இல், அவருக்கு புற்றுநோய் இருப்பது வெளி உலகிற்கு தெரியவந்தது. இது தொடர்பாக அப்போது ஒரு அறிக்கையை வெளியிட்டு புற்றுநோயின் தீவிரம் குறித்தும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Martina Navratilova cures from cancer
2010லும் புற்றுநோயில் பாதிக்கப்பட்டு மீண்ட மார்ட்டினா நவ்ரத்திலோவா
2010 ஆம் ஆண்டில், மார்ட்டினா நவ்ரத்திலோவாவுக்கு குறைந்த அளவிலான மார்பக புற்றுநோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் லம்பெக்டோமிக்கு உட்படுத்தப்பட்டு குணமடைந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் நவ்ரத்திலோவா தனது கழுத்தில் நிணநீர் முனை பெரிதாக இருப்பதைக் கண்டார்.
சோதனையில் அவர் தொண்டை புற்றுநோயின் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை பெற்றுவந்த அவர் தற்போது முழுமையாக புற்றுநோயிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
தனது காலத்தில் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்த நவ்ரத்திலோவா, 18 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களையும் மொத்தம் 167 டபிள்யூடிஏ பட்டங்களையும் வென்றார்.