டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி; அவருக்கு பதிலாக களமிறங்க போவது யார்?
செய்தி முன்னோட்டம்
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிப்ரவரி 12-ஆம் தேதி நமீபியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்தியாவின் இரண்டாவது லீக் போட்டியில் அவர் விளையாடுவது பெரும் சந்தேகமாகியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியின் போதே அபிஷேக் சர்மா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லிக்கு வந்த பிறகு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த இரண்டு நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?
இது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரயான் டென் டோஸ்கேட் கூறுகையில், "அபிஷேக்கிற்கு இன்னும் வயிற்றுப் உபாதைகள் உள்ளன. அவர் இன்னும் இரண்டு நாட்களில் குணமடைந்து விடுவார் என நம்புகிறோம். அவரது உடல்நிலையைப் பொறுத்தே அணியின் காம்பினேஷன் அமையும்," என்றார். நேற்று நடைபெற்ற பயிற்சி அமர்வில் அபிஷேக் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் சர்மா விளையாடவில்லை என்றால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. இதற்கிடையில், வைரஸ் காய்ச்சலால் முதல் போட்டியை தவறவிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது குணமடைந்து பயிற்சிக்கு திரும்பியுள்ளார். இது இந்திய அணிக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.